கீரமங்கலம் வகை சாதுச் செட்டியார்கள் தலைமைச் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது



       திருமணத்தில் சில சடங்குகள் ஏன்? எதற்கு? எப்படி?


கை எடுத்தல் (சீக்கை சுற்றுதல்):
ஒவ்வொரு தோஷமாக விலக வைத்தல் அதற்காக பகவானை வழிபடுதல்

பாலிகை போடுவது
திருமணமான ஆண்கள் பெண்களை விட ஆண்கள் போடுவதுநல்லது) நவதானிய விதை போட்டு, பெண்கள் பாதுகாத்து நவதானியங்களை முளைக்கச் செய்து திருமணத்தன்று குளத்தில் கரைக்க வேண்டும். இது வம்ச விருத்திக்கு நல்லது. (நவதானியங்கள் -கோதுமை, நெல், பயிறு உளுந்து, கொ.கடலை, மொச்சை, துவரை தட்டப்பயிறு, கொள்ளு)

கங்கனம் கட்டுவது
முகூர்த்த நேரம் என்பது 12 மணிநேரம் மூணேமுக்கால் நாழிகை) அந்த நேரத்தில் தீய சக்திகள் மணமக்களை அணுகாமலிருக்க மஞ்சளைக் கையில் கட்டுவது.

அம்மி மிதித்தல்
குழவி அசைந்தாலும், அம்மி அசையாமல் இருப்பது போல கணவன் மனது அசைந்தாலும் மனைவி அவனை அவள் நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்பதைச் சொல்லுதல்.

அருந்ததி பார்ப்பது
வான மண்டலத்தில் நட்சத்திரங்கள் நகரக்கூடியவை. ஆனால் அருந்ததி நட்சத்திரம் நகராமல் ஒரே இடத்தில் இருப்பது போல மணமக்கள் இருவரும் இருக்கக் காண்பிப்பது.

பால், பழம் கொடுப்பது
மணமக்கள் முகூர்த்த கால சடங்குகளால் களைத்திருப்பதால் இருவருக்கும் பெரியவர்கள் கொடுப்பது.


நமது திருமணச் சடங்குகள் நடைபெறும் முறை


மாப்பிள்ளை அழைப்பு :
மஞ்சள், குங்குமம். பூ. வெற்றிலைபாக்கு, இரண்டு சீப்பு வாழைப்பழம், ஒரு கிலோ ஜீனி. ஐந்து தேங்காய். ஒரு மாலை

பெண் அழைப்பு:
மேலே கூறிய சாமான்களே இதற்கும் வாங்கவேண்டும். இரண்டு அழைப்புகளுமே மேளதாளத்துடன் சென்று அழைத்து வரவேண்டும்.

மாமன் வீடு, அத்தை வீடு, அக்கா, தங்கை வீட்டு அழைப்பு:
அந்தந்த வகை பங்காளிகளை உட்காரவைத்துத் தேங்காய். வெற்றிலைபாக்கு, பழம், பூ, ஜீனி, மஞ்சள் இவற்றைத் தட்டில் வைத்து, அவர்களுக்குப் பொட்டு வைத்துத் திருமணத்திற்கு அழைக்கவேண்டும். மணவறையில் இரண்டு பக்கமும் குத்துவிளக்கு ஏற்றவேண்டும்.
மணவறை பொங்கல் - வெண்பொங்கல்
மாப்பிள்ளை. பெண் இவர்களின் தாய்மாமன் மனைவிகள் இந்தப் பொங்கலை வைக்கவேண்டும். அதற்காக அவர்களுக்கு தலா ரூ.16 மட்டும் வைத்து, வெற்றிலைபாக்கு, பூ, மஞ்சள் இவைகளுடன் சேர்த்துத் தட்டில் வைத்து மரியாதை செய்யவேண்டும்.

மாப்பிள்ளைக்குச் சடங்குகள் செய்யும் விவரம்:
மணமேடையில் மாக்கோலம் போட்ட பின்பு புதுப்பாய் விரிக்க வேண்டும். மாப்பிள்ளை புதுத்துணி அணிந்து கொண்டு தாய்மாமன் கையால் மாலை அணிவித்து மணமேடைக்கு அழைத்து வரவேண்டும்.
மணமேடை முன்பாக மாப்பிள்ளை வீட்டார் மூன்று இலைகளைப் போட்டுப் பொங்கல் வைத்து வாழைப்பழம் உரித்து வைத்து, நெய் ஊற்றி வைக்கவேண்டும். இதேபோல் பெண் வீட்டாரும் மூன்று இலைகள் போட்டுச் செய்யவேண்டும்.

பகவானை கை எடுக்கும் சடங்கு, (சீக்கை சுற்றும் சடங்கு):
1. மாப்பிள்ளையின் இரு கைகளிலும் கைக்கு நான்கு வெற்றிலை வீதம் வேல் வடிவத்தில் மடித்துக் கொள்ளவேண்டும்.

2. பித்தளைப்படியில் தலைதடவ நெல்லிட்டு அதில் கோணி ஊசியில் வெற்றிலையைச் சொருகி நெல்லில் சொருக வேண்டும்.

3. மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த 6 பெண்களும், மணமகள் வீட்டைச் சேர்ந்த 5 பெண்களும் ஆக மொத்தம் 11 பேர் சேர்ந்து நெல் வெற்றிலை உள்ள பித்தளை படியுடன் மாப்பிள்ளையை மூன்று முறை வலப்புறமாக சுற்றவேண்டும்.

4. தட்டில் வெற்றிலைபாக்குடன் மாப்பிள்ளையை மூன்று முறை சுற்றி வரவேண்டும்.

5. தட்டில் ஜீனி வைத்து மாப்பிள்ளையை மூன்று முறை சுற்றி வரவேண்டும்.

6. மாப்பிள்ளை கையில் வெற்றிலையைக் கட்டை விரலில் வைத்துக்கொண்டு கிழக்கு நோக்கி நிற்கவேண்டும். அப்பொழுது ஆத்தி இலையை மாப்பிள்ளையின் கையில் ஒரு பெண் போட வேண்டும். பெண்கள் மாப்பிள்ளையின் கையின் கீழே மஞ்சள்நீர் உள்ள சட்டியைப் பிடித்துக் கொள்ளவேண்டும். இன்னொரு பெண் சொம்பில் தண்ணீர் எடுத்து ஆத்தி இலையை கீழே உள்ள மஞ்சள் நீர்ச் சட்டியில் விட்டுவிட்டுக் கையைத் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிடவேண்டும். இதேபோன்று தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மற்ற திசைகளிலும் செய்யவேண்டும்.

7. நான்கு திசைகளிலும் மேற்படிச் சடங்கைச் செய்து முடித்தபின், கிழக்கு நோக்கி மாப்பிள்ளை நிற்கவேண்டும். மீண்டும் மாப்பிள்ளையின் கையில் ஒரு பெண் ஆத்தி இலை இட மற்றொரு பெண் ஒரு சொம்பில் இருந்து தண்ணீர் ஊற்ற மற்றவர்கள் அவர் கையின் கீழே பிடித்து இருக்கும் மஞ்சள்நீர் உள்ள சட்டியில் மாப்பிள்ளை கையில் உள்ள வெற்றிலை, ஆத்தி இலை முதலியவற்றை விட்டுவிட்டு மேலே கையைத் தூக்கிக் கும்பிடவேண்டும்.

8. மாப்பிள்ளையைத் தாய்மாமன் மணமகன் அறைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

9. மாப்பிள்ளையைத் தாய்மாமன் மணமகன் அறையில் புதுப்பாயில் உட்கார வைத்து பாலும், பழமும் கொடுக்கவேண்டும். மேற்படிச் சடங்குகள் அனைத்தும் மணமக்களுக்குச் செய்யும்பொழுது மணமகள் வீட்டில், மணமகளுக்கு 6 பெண்களும், மணமகன் வீட்டில் 5 பெண்களும் சேர்ந்து மொத்தம் 11 பேர் இந்த சடங்கை செய்ய வேண்டும்.

முகூர்த்த ஓலை எழுதுதல்:
மாப்பிள்ளையின் தாய்மாமன். பங்காளிகள். பெண் தாய்மாமன். பங்காளிகள் முதலியோர் வெற்றிலைபாக்கு, பழம், பூ தட்டுடன் மணமேடை அருகில் உட்கார்ந்து ஒரு நோட்டில் மஞ்சள். குங்குமம் தடவித் திருமண பத்திரிக்கையுடன் முகூர்த்த ஓலை எழுதவேண்டும். மாப்பிள்ளை மாமனும். பெண் மாமனும் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு முகூர்த்த ஓலை எழுதிய நோட்டை பெண் மாமனிடம் இருந்து மாப்பிள்ளை மாமன் பெற்றுக் கொள்ள வேண்டும். முகூர்த்த ஓலை எழுதியதின் அடையாளமாக முகூர்த்த ஓலை எழுதியவர்க்குச் சந்தனம் கொடுக்க வேண்டும்.

அரசாணிப் பானை கட்டுதல்:
பாளைக்கம்பு மூன்று பக்கமும் வைத்து அதன் நடுவில் தவலைப்பானை ஒன்று, குடம் ஒன்று செம்பு மீது தேங்காய் வைத்து கயிற்றினால் கம்பு, சொம்பு. குடம், தவலை முதலியவற்றைக் கீழே விழாதபடி கட்டவேண்டும்.
இதே போன்று மணவறையின் ஒரு பக்கம் மணமகன் வீட்டாரும். இன்னொரு பக்கம் மணமகள் வீட்டாரும் அரசானிப்பானை கட்டவேண்டும். இதை மண்பாத்திரங்களினாலும் செய்து பாளைக்கம்பு வைத்து கட்டலாம்.

மாப்பிள்ளை மணமகன் கோலத்தில் மணமேடைக்கு வருதல்:
மாப்பிள்ளைக்கு புதுத்துணி அணிவித்து அலங்கரித்துத் திருமண மாலையைத் தாய்மாமன் கையால் அணிவிக்கச்செய்து மணமேடைக்கு அழைத்து வரவேண்டும். மணவறையில் பெண்வீட்டார் புதுப்பாய் விரித்து நான்கு தலையணை வைத்து அதன் மேல் விரிப் து மாப்பிள்ளையை அதன்மேல் நிற்கச் செய்யவேண்டும். ஒன்று விரித்து

தொப்பாரம் கட்டுதல் :
மாப்பிள்ளை வீட்டார் 1/4 மீட்டர் வெள்ளைத்துணி வாங்கி அதைப் பெண்வீட்டாரிடம் கொடுக்கவேண்டும். பெண் வீட்டார்கள் அதில் நாணயத்தையோ அல்லது பவுன் காசையோ முடிந்து அந்தத் துணியை நெற்றியில் சுற்றும் விதமாக முறுக்கி மாப்பிள்ளை வீட்டாரும். பெண் வீட்டாகும் சேர்ந்து மொத்தம் 7 பேர் மாப்பிள்ளையை நிற்க வைத்து அவர் தலையில் கிரீடம் மாதிரி கட்டவேண்டும். தொப்பாரம் கட்டும்பொழுது பெண்வீட்டார் பாலும். பழச்சட்டி மேலே ஒன்று கீழே ஒன்று மூடி வைத்திருக்கவேண்டும். அருகில் மூன்று தட்டுகளில் ஒரு தட்டில் தேங்காய் 5. ஒரு தட்டில் ஒரு கிலோ ஜீனி. ஒரு தட்டில் வெற்றிலைபாக்கு, வாழைப்பழம், பூ, மஞ்சள் வைக்கவேண்டும்.

கங்கனம் கட்டுதல்
பின்பு மாப்பிள்ளை மணமேடையில் அமரவேண்டும். தட்டில் 1 கிலோ பச்சரிசி, தேங்காய், வெற்றிலைபாக்கு. பூ வைத்து ஐயரிடம் கொடுக்கவேண்டும்.
ஒரு மஞ்சள் நூலில் ஒரு விரலி மஞ்சள் வைத்து முடிச்சுப்போட்டு மாப்பிள்ளையின் வலது கையில் திருமணப் புரோகிதர்கள் கட்டவேண்டும். அப்பொழுது கெட்டி மேளம் கொட்ட வேண்டும். அதுசமயம் ஊற வைத்த நவதானியத்தைப் பாலுடன் சேர்த்து பெண்வீட்டார் 5. மாப்பிள்ளை வீட்டார் 5 பேர் வீதம் மாப்பிள்ளை உறவினரும். பெண் உறவினரும் பாலி சட்டியில் எடுத்து வைக்கவேண்டும்.

பாலி வகை சாமான்கள்:
நெல்,துவரை,சோம்பு, வெந்தயம், கேழ்வரகு

நவதானியத்தைத் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். ஊறவைத்த மறுநாள் துணியில் கட்டி வைக்கவேண்டும். திருமணத்தன்று காலையில் வைத்துப் பால் ஊற்றவேண்டும்.

மாப்பிள்ளையின் சகோதரிகள் மூவர் ஒரு தட்டில் திருமண முகூர்த்தப் புடவை, ரவிக்கை. மஞ்சள் தடவிய தேங்காய் 3. குங்குமம் வைத்த குங்குமச்சிமிழ், வெற்றிலைபாக்கு, பூ, மஞ்சள், வாழைப்பழம், கண்ணாடி, சீப்பு, சோப்பு, பவுடர் முதலியவற்றை வைத்து வெள்ளைத்துணியால் கட்டி அதன் மேல் பெண்ணிற்கு உரிய முகூர்த்த மாலை, பூச்செண்டு முதலியவற்றை வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். இன்னொரு தட்டில் பூ. மஞ்சள் முதலியவற்றை வெள்ளைத்துணியில் கட்டி எடுத்துக் கொள்ளவேண்டும். மூன்றாவது தட்டில் தேங்காய் 5. பூ. வெற்றிலைபாக்கு, மஞ்சள் வைத்து வெள்ளைத்துணியில் கட்டி எடுத்துக் கொள்ளவேண்டும். பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைப்பதற்கு ஒரு தட்டில் வெற்றிலைபாக்கு, பழம். எடுத்துக்கொண்டு மாப்பிள்ளையை அழைத்து கொண்டு அவருடைய சகோதரிகளும். தாய்மாமனும் பிள்ளையார் கோவிலுக்குச் செல்லவேண்டும்.

மணமேடையில் இருந்து மாப்பிள்ளை கோவிலுக்குச் சென்ற பிறகு மணமகனை மேடைக்கு அழைத்து வரவேண்டும். மணமகளுக்கு மேலே கூறியவாறு கங்கனம் கட்ட வேண்டும், பெண்ணிற்கு கங்கனம் கட்டியதும் மணப்பெண் அறைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

மாப்பிள்ளை, பிள்ளையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருமண மண்டப வாசலுக்கு வரும்பொழுது மணப்பெண்ணின் சகோதரிகள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுக்கவேண்டும். அப்பொழுது மாப்பிள்ளை ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணம் மனம்போல் கொடுக்கலாம். கொடுக்கவேண்டும். பின்பு மாப்பிள்ளையை அவரது தாய்மாமன் மணவறைக்கு அழைத்து வந்து வலதுகாலை எடுத்து வைத்து மணமேடையில் உட்காரும் முன்பு எல்லோரையும் கை கூப்பி வணங்கி விட்டு அமரவேண்டும்.

மாப்பிள்ளையின் சகோதரிகள் கோவிலுக்கு எடுத்துச்சென்ற தட்டை ஐயரிடம் கொடுக்கவேண்டும். அந்தத் தட்டில் உள்ள திருமணப்பெண்ணன் கூரைப்புடவையின் உள் முந்தியில் 5ரூபாய் நாணயத்தை மாப்பிள்ளை வீட்டார் முடிய வேண்டும். பின்பு பெண்ணின் மாமன் மனைவியிடம் மேற்படித் தட்டை கொடுத்துப் பெண்ணிற்கு அலங்காரம் செய்து அழைத்து வருமாறு செய்ய வேண்டும்.

திருமணப் புரோகிதர் மஞ்சள் தடவிய நூலில் திருமாங்கல்யம், காசு 2. குண்டு முதலியவற்றைச் சேர்க்கவேண்டும்.

மணப்பெண்ணை அலங்காரம் செய்து தாய்மாமன் மனைவி முகூர்த்த மாலையை அணிவித்து மணமகள் கையைப் பிடித்து, மணமேடைக்கு அழைத்து வரவேண்டும். மணமகள் வலது காலை எடுத்து வைத்து, மாப்பிள்ளையின் வலது பக்கத்தில் அமரும் முன்பு எல்லோரையும் வணங்கி அமர வேண்டும்.

மணப்பெண்ணின் மூத்த சகோதரிகளுக்குத் திருமணமாகி இருந்தால் மாப்பிள்ளைக்கு தட்டில் வெற்றிலைபாக்கு, பழம், பூ, மஞ்சள் மனம்போல் பணம் முதலியன வைத்து. பொட்டு வைத்து, மாலை அணிவித்து மரியாதை செய்யவேண்டும்.

பின்பு ஒரு தட்டில் வெற்றிலைபாக்கு, பழம், பூ, மஞ்சள், மணவறைப் பணம் மனம்போல் வைத்து, மாப்பிள்ளைக்குப் பொட்டு வைத்து, மாலை அணிவித்துப் பெண்ணின் தகப்பனாரோ அல்லது உறவினர்களோ, வீட்டில் பெரியவர்களோ தட்டை மாப்பிள்ளையிடம் வழங்க வேண்டும்.

புரோகிதர் திருமண ஹோமம், மந்திரங்கள் முதலியவற்றைச் செய்து கொண்டிருப்பார். மாப்பிள்ளையின் தாய்மாமன் தலையில் முண்டாசு கட்டி கொண்டு புரோகிதரிடம் இருக்கின்ற திருமாங்கல்யம், கோவிலில் இருந்து கொண்டு வந்த தேங்காய் மூடி, வெற்றிலைபாக்கு உள்ளதட்டை வாங்கிக் கொண்டு திருமண மண்டபத்தில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க எடுத்துச் செல்லவேண்டும்.பெண் தாய்மாமன் தலையில் முண்டாக கட்டிக்கொண்டு, மஞ்சள் தடவிய பச்சரிசி அட்சதை தட்டை அய்யரிடம் இருந்து வாங்கிக் கொண்டு மண்டபத்தில் உள்ள மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக அட்சதை கொடுத்து வரவேண்டும்.

இந்த சமயத்தில் மணமகன் தாய், தந்தையர் ஒரு பக்கமாகவும் மணமகள் தாய், தந்தையர் ஒரு பக்கமாகவும் அமர்ந்து கொள்ளவேண்டும். மணமகன்/மணமகள் இருவரது தகப்பனார்களும் தலையில் முண்டாசுடன் அமர்ந்திருக்கவேண்டும்.

பச்சரிசி உள்ள தட்டில் இருக்கின்ற தேங்காய், வெற்றிலைபாக்கு, பூ முதலியவற்றை மணமகள் இரண்டு கைகளாலும் அள்ளி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மணமகளின் கையின் கீழே மணமகன் தனது இரு கைகளையும் வைத்துக் கொள்ளவேண்டும். மணமகளின் தகப்பனார் மணமகளின் கையில் இருக்கின்ற தேங்காயின் மேல் தன் கையை வைத்துக் கொள்ளவேண்டும், மணப்பெண்ணின் தாய் சொம்பில் உள்ள தண்ணீரை மா இலை மூலம் மூன்று முறை வார்க்கவேண்டும். இதற்குத்தான் தாரை வார்த்துக் கொடுப்பது என்று பெயர்.

பின்பு மாப்பிள்ளையின் சகோதரிகள் மணவறையில் உள்ள இரண்டு குத்துவிளக்குகளில் உள்ள திரிகளில், ஒரு குத்துவிளக்கின். ஒரு திரியை எடுத்து வெற்றிலையுடன் சேர்த்து மாப்பிள்ளையின் இளைய சகோதரி, வெற்றிலையுடன் சேர்த்து மணமக்களுக்கு பின்புறம் பிடித்துக் கொள்ளவேண்டும். மந்திரங்கள் முழங்க திருமணத்திற்கு வந்திருக்கும் அனைவருடைய வாழ்த்துக்களுடன் அய்யரோ அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களோ எடுத்துக் கொடுக்கும் மங்களநாணை மணமகள் கழுத்தில் கட்ட வேண்டும். அப்பொழுது மாப்பிள்ளை ஓர் முடிச்சு போட்ட பின்பு அவரது மூத்த சகோதரி, இரண்டாவது, மூன்றாவது முடிச்சுக்களைப் போடுவார். அப்பொழுது கெட்டிமேளம் முழங்க அனைவரும் மணமக்களின் மீது அட்சதை போட திருமணம் இனிதே நடைபெறுகிறது. பின்பு மணமகன் மணமகளின் திருமாங்கல்ய முடிச்சிலும், நெற்றியிலும் திலகம் இடுவார்.

மைத்துனர். மாப்பிள்ளைக்கு மோதிரமோ, செயினோ அணிவிப்பார். திருமணம் முடிந்தபின் அம்மி குழவியில் தேங்காய் உடைத்து ஆத்தி இலை. அரிசி, பூ கலந்து அய்யர் கொடுக்கும் அட்சதையில் மணமக்களுடைய கால், இடுப்பு, தோள்பட்டையில் தொட்டு அட்சதையைப் பின்பக்கம் மூன்றுமுறை போடவேண்டும். மாப்பிள்ளையின் வலதுகையையும் மணமகளின் இடதுகையையும் சேர்த்து அதன்மேல் சிகப்புத்துண்டைப் போடவேண்டும். மணமகளின் கையைப்பிடித்து மணமகன் மணவறையை மூன்று முறை சுற்றி வரவேண்டும்.

மணமக்கள் இருவரும் அரசாணிப்பானை அருகில், அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வேண்டும். பின்பு அரசாணிப்பானையில் உள்ள தவலையை எடுத்து அதில் மஞ்சள் கலந்த நீரை ஊற்ற வேண்டும். வயதில் மூத்த பெண்மணி சிறிய சங்கு ஒன்றும், நெளி மோதிரம் இரண்டையும் தவலையில் போடுவார்கள். அப்பொழுது இருவரும் ஒரே நேரத்தில் தங்களுடைய கைகளை உள்ளே விட்டு ஆளுக்கு ஒன்றை எடுக்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். அதன்பிறகு மாப்பிள்ளையின் வேட்டியின் நுனியில் மணப்பெண் மஞ்சள்நீரைத் தெளிக்க வேண்டும். மாப்பிள்ளை பெண்ணுடைய முந்தானையில் மஞ்சள்நீரைத் தெளிக்க வேண்டும். பின்பு சங்கு, மோதிரத்தை பெண்ணின் முந்தானையில் வைத்து சொருகி கொள்ளவேண்டும். மணமகன் அறைக்கு மணமக்களை அழைத்துச் சென்று பால், பழம் கொடுக்கவேண்டும். பின்பு, மணமகள் அறைக்கு சென்று பால், பழம் கொடுக்கவேண்டும்.

திருமணம் முடிந்து, திருமண விருந்து சாப்பிட்ட பின்பு, மணமக்களுக்குச் சாப்பாட்டுப் பணம் வைக்கவேண்டும். மண்டபத்திலேயே மூன்று அழைப்புகளுக்கும் பணம் வைத்து முடித்துக் கொள்ளவேண்டும்.

சீர்சாமான்கள் கொடுக்கும்பொழுது முதலில் மணப்பெண்ணின் தாய் மாப்பிள்ளையின் தாயிடம், குத்துவிளக்கு. லெக்ஷ்மி விளக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுக்கவேண்டும். அதன்பின் மற்ற சாமான்களை கொடுக்கவேண்டும். அப்பொழுது மணமக்களுக்கு பொட்டுவைத்து சீர்பணம் கொடுக்கவேண்டும். அன்று மாலை மணப்பெண்ணிற்கு உள்ள சீர்வரிசை கொடுத்து மணமக்களை மணமகன் வீட்டிற்கு அனுப்பவேண்டும்.

மணிப்பெருக்கு வைபவம்:
அன்று இரவு குத்துவிளக்கு, பால், பால்செம்பு, பூ. பழவகைகள், இனிப்பு வகைகள் மொத்தம் 11 தட்டுகளுடன் பணம் வைத்துக் கொடுக்கவேண்டும். மணப்பெண்ணை அமரவைத்து குத்துவிளக்கு வைத்து, வெற்றிலைபாக்கு, பழம். பூ. மஞ்சள், சந்தனம், ஜீனி, குங்குமம் முதலியவற்றை பெண் முன்வைத்து நாத்தனாரின் சீர்தட்டை வைத்து அதன்பின் நாத்தனார், மணமகன் வீட்டில் உள்ள நகையை அணிவித்து பின் பெண் போட்டிருக்கும் கருகமணியை ஐந்துபேர் சேர்ந்து கழற்றி நாத்தனார் சீர்தட்டில் வைக்கவேண்டும்.

பெண்ணிற்குப் பால், பழம், பெரியோர்கள் கொடுத்து மணமக்கள் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவர்.